அரும்புகள்

மழலையர் தமிழிப்பாடல்கள் தொகுப்பு-2 [குழு விளையாட்டு]

Posted on: மார்ச் 11, 2008

குழுப் பாடல்கள்:

சிறுமிகள் இரண்டு குழுவாக இணைந்து ஓடி விளையாடுவார். ஒரு அணியில் உள்ள ஒருவரை மற்றொரு அணியைச் சேர்ந்த சிறுமி தொட்டு ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இரண்டு தரப்பையும் சேர்ந்த இரு சிறுமிகளைத் தேர்ந்தெப்பதற்க்கானப் பாட்டு தான் இது. ஒரு அணியில் அனைவருக்கும் பூக்களின் பெயர்களைக் கொண்டு பேர் இடப்படும். நடுவருக்கும் இது தெரியும். பின்னர் இரு அணியினரும் எதிரெதிரே நின்று கொண்டு தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு கோரசாகப் பாடுவார்கள்.

முதல் அணி : பூப்பறிக்க வருகிறோம்! பூப்பறிக்க வருகிறோம்!

இரண் அணி : எந்த மாதம் வருவீர்கள்! எந்த மாதம் வருவீர்கள்!

முதல் அணி : ஆடி மாதம் வருகிறோம்!ஆடி மாதம் வருகிறோம்!

இரண் அணி :எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!எந்தப் பூவைப் பறிப்பீர்கள்!

முதல் அணி : மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!
மல்லிகைப் பூவைப் பறிக்கிறோம்!

இரண் அணி : யாரை விட்டு அனுப்புவீர்கள்!யாரை விட்டு அனுப்புவீர்கள்!

முதல் அணி : அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!அமுதாவை விட்டு அனுப்புகிறோம்!

இதில் பூவின் பெயரும், சிறுமியின் பெயரும் மட்டும் மாறும்.******தமிழ்ப் பிரியன்

***************************************************************
எண்களின் வரிசை தரும் குழுப் பாடல்கள்:

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்த் ஒருகை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது தானியம் வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து>>>>>>>>>>>>>>>கயல்விழி முத்துலஷ்மி

**************************************************************
இரண்டு பிள்ளைகள் நேர் எதிராக நின்று கொண்டு கைகளைக் கோர்த்து கூரை போல் அமைக்க மற்ற்வர்கள் வரிசையாக ஒவ்வொருவராக பாடிக் கொண்டே உள்ளே நுழைந்து இருவரையும் சுற்றி வர கடைசியாக பத்து சொல்லும் போது உள்ளே நுழைபவர் அவுட் ஆகி விடுவார்.

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்துச்சாம்
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலே பூ பூத்துச்சாம்
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சே பூ பூத்துச்சாம்
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறே பூ பூத்துச்சாம்
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழே பூ பூத்துச்சாம்
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டே பூ பூத்துச்சாம்
ஒன்பது குடம் தண்ணி ஊத்தி ஒன்பதே பூ பூத்துச்சாம்
பத்து குடம் தண்ணி ஊத்தி பத்தே பூ பூத்துச்சாம்
****காட்டாறு

********************************************************************
வேடிக்கைப் பாடல்கள்:

பலூனம்மா பாலூன்
கலர்க் கலரா இருக்குது..
கரடி போல ஒண்ணு
காக்கா போல ஒண்ணு

காத்தாடி போல ஒண்ணு
கத்திரி போல ஒண்ணு

காசு போட்டு வாங்கலாம்கூச்சல் போட்டு ஓடலாம்

டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
அப்பா வர நேர மாச்சு வம்பு பண்ணாதே>>>>>>>>>>>>வல்லியம்மா

******************************************************************

பெயரை மறந்த ஈ..

ஒரு ஈ தன் பெயரை மறந்து விட்டதாம் ஒவ்வொருவராய்ப் போய்க் கேட்கிறதாம்.ஈ யாக ஒரு பிள்ளை தன்னை பாவித்து அடுத்தவரிடம் கேட்கும் விளையாட்டு:

கொழு கொழு கன்றே கொழு கொழு கன்றே
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே……என் அம்மாவிடம் கேள்
கன்றை ஈன்ற பசுவே பசுவே
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே…..மாட்டுக்காரனிடம் கேள்
மாடு மேய்க்கும் சிறுவா மாடு மேய்க்கும் சிறுவா
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே….பச்சைப் புல்லிடம் கேள்
பச்சைப் புல்லே பச்சைப் புல்லே
என் பேர் என்ன??
எனக்குத் தெரியாதே….அதோ அந்தக் குதிரையைக் கேள்
புல்லைத் தின்னும் குதிரையே குதிரையே
என் பேர் என்ன??
குதிரை ஈ..ஈ…ஈ…எனக் கனைக்க
ஆஹா..நான் ஈ…என் பேர்…ஈ…என சந்தோஷப் பட்டதாம்******வல்லியம்மா /கண்மணி

அந்த ஈ பாட்டு முழுசும் இப்படியும் வரும்.

கொழு கொழு கன்றே
கன்றின் தாயே
கன்றை மேக்கும் இடையா
இடையன் கை கோலே
கோலே கொடிமரமே
கொடிமரத்துக் கொக்கே
கொக்கும் வாழும் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீனைப்பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டியே
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத்தின்னும் குதிரையே
என் பேரென்ன??
….. நல்லாருக்கா>>>>>>>>>>>>>>>.கிருத்திகா

*****************************************************

குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
பைய வேணா பாத்துக்கோ
பணத்த வாங்கிப் போட்டுக்கோ
சில்லறயை மாத்திக்கோ
சிலுக்கு சட்டை போட்டுக்கோ
ஜில்ஜில் ஆடிக்கோ>>>>>>>>>>>>>>>>.நானானி

4 பதில்கள் to "மழலையர் தமிழிப்பாடல்கள் தொகுப்பு-2 [குழு விளையாட்டு]"

குழுவிளையாட்டு பாடல் வேணுமா?

இப்போ எனக்கொரு பாட்டு ஞாபகம் வருது.ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்ததாம்ரெண்டு குடம் தண்ணி எடுத்து ரெண்டு பூ பூத்ததாம்………….பத்து குடம் தண்ணி எடுத்து பத்து பூ பூத்ததாம்இப்படியே பாடிட்டு ஆடிட்டு இருந்த காலம் நினைவுக்கு வருது.

காட்டாறு சொன்ன பாடல் விளையாட்டு அத்தோடு முடியாது.கைகளுக்கிடையில் மாட்டிக்கொண்டவரை விடுவிக்க மற்றவரெல்லாம் சேர்ந்து பிடித்த்க்கொண்டவரைக் கெஞ்சுவர்.எப்படி?”இவ்வள்வு பணம்ம்தாரேன் விடுடா துலுக்கா…விடமாட்டேன் பலுக்கா..இப்படியே தொகை கூடிக்கொண்டே போகும். நான் போட நினைத்தேன். அதற்குள் காட்டாறு பாய்ந்துவிட்டது.ந்ன்றி! காட்டாறு!

டீச்சர்! அந்த ஈ பாட்டு புதுசா நல்லா இருக்கு. நன்றி 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements

%d bloggers like this: