அரும்புகள்

Archive for the ‘நீதிக் கதைகள்’ Category

னைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நம் வாழ்க்கையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பது நாம் எப்படியிருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
ஒரு ஊர்ல ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.மாளிகையின் உள்ளே எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணாடிகளே பொருத்தப் பட்டிருந்தன.
ஒரு நாள் நாய்க் குட்டி ஒன்று உள்ளே சென்று பார்த்தது.மாளிகை முழுதும் கண்ணாடி என்பதால் பார்க்கும் இடமெல்லாம் நாய்க் குட்டிகளாகத் தெரியவும் இந்த குட்டி நாய்க்கு சந்தோஷம் வந்தது.தன் வாலை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தது.கண்ணாடியில் தெரிந்த நாய்க்குட்டியின் பிம்பங்களும் அதே போல வாலை ஆட்டுவதாகத் தெரிந்தது.அட்டா எத்தனை அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்னு நினைத்தபடியே சந்தோஷமாக வெளியே ஓடியது.

அதே ஊரில் இன்னொரு நாய்க் குட்டி இருந்தது.அது கொஞ்சம் முசுடு.யாரோடும் சேராமல் தனித்தே இருக்கும்.அந்த நாய்க்குட்டியும் கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்க்க விரும்பியது.கண்ணாடியில் தெரிந்த அதனுடை பிம்பங்களைப் பார்த்ததும் அதற்கு பயமும் வெறுப்பும் வந்ததால் தற்காப்புக்காக முறைத்தபடியே கோபமாகப் பார்த்தது.அதனுடைய பிம்பங்களும் அவ்வாறே திரும்ப முறைக்கவும் அடடா இத்தனை எதிரிகளா எனப் பயந்து வெளியே ஓடி விட்டது.

அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யலாம்.வெறுப்பு ,கோபம் இவற்றை விதைத்தால் திரும்பக் கிடைப்பதும் அதுவே.நாம் என்ன செய்கிறோமே அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்.நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

Advertisements

குழந்தைகளே!
நாம் ஏதாவது செய்யும்போது பலபேர் பலவிதமாக பேசுவார்கள்.ஒருவருக்கு சரியென்று படுவது இன்னொருவருக்குத் தப்பாகத் தெரியலாம்.அதனால் நமக்கு எது சரியென்று தேன்றுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி நடந்த ஒரு வேடிக்கையைப் பாருங்கள்.

ஒரு தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த ஒருவர் ‘கழுதை சும்மாதானே செல்கிறது.யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே’ என்றார்.
அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.
கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர்,’ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு,நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?’ எனக் கேட்டார்.
உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான்.
தந்தையும் அவ்வாறே செய்தார்.இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு,
இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார்.
‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?’என
தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இரண்டுபேருமே ஏறிச் செல்வோம் என கழுதையிம் முதுகில் ஏறிக் கொண்டனர்.

இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர்,’அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள்.இவர்களுக்கு இரக்கமே இல்லையா’?என எள்ளி நகையாட,
மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல்,இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர்.
இதைகண்டதும் அங்கிருந்தவர்கள் ‘ இதென்ன கூத்து! இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் என ஓஹோ என’ கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம்.எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் நாமாகவே நல்லது எது கெட்டது என்பதை யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.

ஒரு ஊர்ல ஒரு அதிசியமான உருண்டை பறவை இருந்துச்சு. பறவைன்னா பறக்கனும் இல்ல குட்டீஸ். ஆனா இந்த பறவையினால பறக்க முடியாது.
அதுக்கு ஒரே கவலை. ஏதுனாச்சும் பண்ணி பறந்தே ஆகனும்னு உருண்டை பறவைக்கு.

அதுக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுத்துச்சு.

மரத்து மேல கஷ்டப்பட்டு ஏறுச்சு. பறந்து போய் உக்கார முடியாது இல்ல.

மரத்துமேல உக்கார்ந்து அதோட ரெக்கையை அடிச்சு பறக்க முயற்சி செய்துச்சு

ஆனா அதுனால பறக்க முடியலை. தொப்புன்னு கூழ விழுந்துறுச்சு

ஆனா பாருங்க குட்டீஸ் கீழ விழுந்தாலும் அதுக்கு அடி படலை. மரத்து மேல ஏறதுக்கு முன்னாடியே கீழ இலை எல்லாம் பரப்பி வச்சுறுச்சு. அதனால கீழ விழுந்தாலும் அடி படலை.

அப்புறம் தான் அதுக்கு புரிஞ்சது. எல்லாப் பறவைகளும் உருண்டையா இருக்காது. உருண்டையா இருக்குறது தான் இந்தப் பறவையோட சிறப்பு.

அது மாதிரி பறக்குறதும் சில பறவைகளின் சிறப்பு. அது புரிஞ்ச பின்னாடி தேவையில்லாம அந்த முயற்சி செய்யறதை நிறுத்திருச்சு.

குட்டீஸ் அதனால ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கும் திறமையை தெரிந்து அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஹாய் குட்டீஸ்!

உங்களுக்கு புதிய முயல் ஆமை கதை தெரியுமா?

ஒரு காட்டுல இருந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வச்சாங்களாம்.

முயலோட போட்டி போட முடியாது. உன் தகுதிக்கு மீறி ஆசைப் படாதேன்னு ஆமையோட பிரண்ட்ஸ் சொன்னாங்களாம்.

அதுக்கு ஆமை சொல்லிச்சாம் ‘போங்கடா பயந்தாங்கொல்லிகளா. இதுக்கு முன்னாலே எங்க தாத்தா இப்படித்தான் ஒரு முயலோட ஓட்டப் பந்தயத்துல கலந்துகிட்டாராம். தான் பலசாலி வேகமா ஓடுபவன் னு திமிரோட அந்த முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க எங்க தாத்தா ஆமை மெதுவா ஓடிப் போயி ஜெயிச்சிடுச்சாம்.

அப்போ அந்த ஜட்ஜ்’ஸ்லோ வின் த ரேஸ்னு’
தன்னைப் பத்தி கர்வமாயிருப்பவன் ஜெயிக்கிறதில்லை அப்படீன்னு சொன்னாராம்.

அதனால நானும் ஜெயிச்சுக் காட்டுவேன்னு’ சொல்லியதாம்.

போட்டி நாள் அன்னைக்கு ரெண்டும் ஓடத் தொடங்கியதாம்.

வேகமா ஓடிய முயல் பின்னால ஆமை வராததால சரி கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுப்போமென்று ஒரு மரத்து நிழல்ல படுத்து விட்டதாம்.

மெதுவா ஓடி வந்துகிட்டிருந்த ஆமை வெகு நேரம் கழித்து முயல் தூங்கும் மரத்தருகே வந்ததாம். மரத்தடியில முயல் தூங்குவதைப் பார்த்ததாம்.

ஆஹா இந்த முயல்கள் என்னைக்குமே கர்வம் புடிச்சவர்கள்.
திருந்தவே மாட்டார்களோ என்று நினைத்தபடி ஓட்டத்தைத் தொடர்ந்ததாம்.

திரும்பித் திரும்பி பார்த்தபடி ஓட முயல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணலையென்றதும் தன் தாத்தாவைப் போலவே தான் தான் ஜெயிக்கப் போறோம்னு ஆமைக்கு சந்தோஷமாம்.

வின்னிங் பாயிண்ட்டை நெருங்கும் போது பின்னால் வேகமாக முயல் வருவது தெரிந்ததாம்.
ஓடி வந்த முயல் வின்னிங் பாயிண்ட்டை முதலில் தொட்டு ஜெயித்ததாம்.

ஆமைக்கு ஒரே ஆச்சரியம் .அதோடு சந்தேகமும்.

நல்லா தூங்கிக் கொண்டிருந்த முயல் எப்படி திடீரென்று ஓடி வந்து ஜெயிச்சிடுச்சு.ஒருவேளை பயத்துல நாமதான் கனவு காண்கிறோமா இல்லை பிரமையா ன்னு தன்னையே கிள்ளிப் பார்த்ததாம்.

முயல் சிரித்துக் கொண்டே சொல்லியதாம்,’நண்பா எல்லா நேரத்திலும் எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்க மாட்டாங்க.எங்க தாத்தா ஏதோ தப்புக் கணக்குப் போட்டு தூங்கியதால தோத்துப் போயிட்டார்.
ஆனா நான் இந்தக் காலத்துப் பிள்ளை.எப்படி டைம் மானேஜ் பண்ணுவதுன்னு தெரியும்.
உன் வேகத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணக்கு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ரெஸ்ட் எடுத்தேன்.
எப்படி கரெக்ட்டான நேரத்துல விழிச்சேன்னு பாக்கறியா?இதோ பாரு என் கைக்கடிகாரத்தில் டைம் செட் பண்ணி அலாரம் வத்திருந்தேன்.அலாரம் அடித்ததும் எழுந்து ஓடி வந்து உன்னை முந்திவிட்டேன்’ என்று சிரித்ததாம்.

ஆமை உடனே,’சாரி நண்பா நான் உன்னைத் தவறாக எடை போட்டுவிட்டேன்.உன் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் ‘என்று வாழ்த்தியதாம்.

என்ன குட்டீஸ் கதை பிடிச்சிருக்கா? நீதி என்னன்னு கேக்கறீங்களா?

நீதி: யாரையும் தப்புக் கணக்கு [under estimate]பண்ணக்கூடாது
சரியானபடி திட்டமிட்டு [planning]ஒரு வேலையைச் செய்தால் நிச்சயம் வெற்றிதான்.

ஓகே சீ யூ பை
கண்மணி ஆண்ட்டி

ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாங்க.

அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது.

உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.

அவனை எப்படியும் தப்பிக்க விடாமல் புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நெனச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு ,’மாய விளக்கே என் மீது கோபமா?நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை’ என்றாள்.

இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம்.பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி,’ கோபமில்லையா?அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள்.பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது.அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.”

மீண்டும் விளக்கு காற்றில் அசைய ,’ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா’ என பாட்டி கேட்டாள்.

திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை.நமக்கு மட்டும் ஒன்னும் கேட்கலை.விளக்கு ஆடுவது தெரியுது.ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

”மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன்” என்றபடி பாட்டி ‘ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

பாட்டியிடம் உங்களுக்கு துணைக்கு ஆள் வேண்டுமா என்று கேட்டபோது,’வேண்டாம் எனக்குத்தான் மாய விளக்குத் துணை இருக்கே ‘என்று சிரித்தாள்.

பாட்டியின் சமோயோசித புத்தியைப் பாராட்டிச் சென்றனர்.

நீதி:ஆபத்துக் காலத்தில் சிந்தித்து செயல் பட்டால் அதிலிருந்து நல்லபடியாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்


Advertisements